Contact Us

Name

Email *

Message *

இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் 2019

இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் 2019

2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்


இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்  2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர்வ ரை கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரிலா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன. இத்தாக்குதல்கள் தொடர்பாக 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இத்தாக்குதல்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் அடிப்படைவாத இசுலாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை அரசு அறிவித்தது. 2019 மார்ச் 15 இல் நியூசிலாந்தில் இடம்பெற்ற கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகளுக்குப் பழிவாங்கும் முகமாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என இலங்கைப் பாதுகாப்பு இராசாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனா தெரிவித்தார். இரு தாக்குதல்களுக்கும் நேரடித் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நியூசிலாந்து அரசு அறிவித்தது.

2019 ஏப்ரல் 23 அன்று, இசுலாமிய அரசு (ஐஎஸ்) என்ற இசுலாமியத் தீவிரவாத ஆயுதக்குழுவின் பன்னாட்டுப் பரப்புரை இணையதள அமாக் செய்திச் சேவை இலங்கைத் தாக்குதல்களை தமது உறுப்பினர்களே நடத்தியதாக அறிவித்தது. தமது குழுவிற்கு எதிரான நாடுகளின் குடிமக்களைத் தாக்குவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், இசுலாமிய அரசுக் குழுவிற்கு எதிரான கூட்டமைப்பில் இலங்கை இல்லை எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் எனவும் ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்து, இசுலாமிய அரசின் தலைவர் எனக் கருதப்படும் அபூ பக்கர் அல்-பக்தாதி என்பவர் 18-நிமிடங்கள் உரையாற்றிய காணொளி வெளியிடப்பட்டது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top