Contact Us

Name

Email *

Message *

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி


இலங்கைக்கு தேசிய வருமானத்தை அதிகமாக தேடித்தரும் கைத்தொழில்களில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். எனினும் பல்வேறுபட்ட காரணங்களுக்காக சில தசாப்தங்களாக இத்துறை பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது. ஆனால் அண்மைக் காலமாக இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை வெகுவாக வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் குறிப்பாக 2007 மற்றும் 2008 காலங்களில் கூட சுற்றுலாத் துறையின் வளர்ச்சி குறைவாகக் காணப்பட்டது. 2006 இல் பதிவுசெய்யப்பட்ட 559,603 பயணிகளை விட 2007 இல் 494,008 பயணிகளாக அதாவது 11.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. 2008 இல் இதைவிட வீழ்ச்சி அதாவது 438,475 ஆக 11.2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது.

குறிப்பாக இக்காலப்பகுதிகளில் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்னாசியா, கிழக்காசியா, கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா போன்ற இலங்கைக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வரும் நாடுகளில் விடுக்கப்பட்ட பயண ஆலோசனைகள் மற்றும் நாட்டில் காணப்பட்ட யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட பாதுகாப்பற்ற நிலைமைகள் போன்றவற்றால் பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது எனலாம்.
எனினும் மத்திய கிழக்கு, மாலைதீவு, ரஸ்யா போன்ற நாடுகளில் இருந்து ஓரளவு அதிகரித்த வருகை காணப்பட்டது.

எனவே சுற்றுலாத் துறையால் இலங்கைக்கு கிடைத்த வருவாய் பற்றி பார்க்கையில், 2006 இல் சுற்றுலா வருவாயானது 410 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரிலிருந்து 2007ல் 385 மில்லியனுக்கும், இது 2008ல் 342 மில்லியனுக்கும் வீழ்ச்சியடைந்தது என்றே கூற வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்தும் சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைவதை தடுக்கும் முகமாக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதாவது, 2006 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விதிக்கப்பட்ட ஐ. அ. டொலர் 10 கொண்ட விசா கட்டணத்தை பிற்போட ஒப்புதலளித்தது, சுற்றுலா தொழிற்பாடுகளின் மீது கொடுபடத்தக்க பெறுமதிசேர் வரியினை தற்காலிகமாக பிற்போட்டமை, தாமதமான பெறுமதிசேர் கொடுப்பனவுகளின் மீதான தண்டப்பணத்தினை இடைநிறுத்தியமை மற்றும் மூலதன கொடுப்பனவுகளின் மீதான சட்ட இசைவுத் தாமதம் போன்ற வழிகளில் நிவாரண வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

2007 இல் மிக முக்கிய செயற்பாடு யாதெனில் 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலா வெளிப்படுத்தல் சட்டம் 2007 ஒக்டோபர் 1 ஆம் நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டமையாகும்.

இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமையுடன் இலங்கை அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை மாநாட்டு பணியகம், இலங்கை சுற்றுலா மற்றும் சுற்றுலா அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனம் என்பன தொழிற்பட தொடங்கியமையானது தனியார் துறையின் பங்களிப்பை உத்வேகப்படுத்தியது.

புதிய சுற்றுலா சட்ட முகாமைத்துவத்தில் அரச, தனியார் பங்குடமையினையும் சுற்றுலா கைத்தொழிலினை கட்டுப்படுத்துவதிலும் கூடியளவிற்கு காத்திரமான தன்மையினை உருவாக்கியது.

இத்துறையில் தனியார் துறையினர் முக்கிய தொழிற்பாட்டாளர்களாக இருப்பதனால், வெளிநாட்டு சந்தைகளையும் அதேபோன்று உள்நாட்டு முயற்சிகளையும் இலக்காகக் கொண்ட சுற்றுலாக்கொள்கையின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான இத்துறையின் பங்களிப்பு அரசாங்கத்தினால் வழங்கப்படும் வசதிகளின் மூலம் அதிகரித்தது.

இதன் அடுத்த கட்டமாக 2008ல் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுற்றுலாவினை மேம்படுத்துவதற்கு பல வழிகளை மேற்கொண்டது.

அதாவது, வளர்ச்சியடைவதற்குரிய உள்ளார்ந்த வளத்தைக் காட்டிய நான்கு முக்கிய சந்தைகளான இந்தியா, ஐக்கிய இராட்சியம், ரசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் மீது முக்கிய கவனம் செலுத்தி 2008 தொடக்கம் 2010 வரை சந்தைப்படுத்தல் உபாயம் மற்றும் செயற்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டமை, வீழ்ச்சியடைந்து செல்லும் சுற்றுலா கைத்தொழிலுக்கு புத்துயிரளிப்பதற்காக கடன்களை மீள் அட்டவணைப்படுத்தல், 15 சதவீத எரிபொருள் மேலதிக கட்டணம் என்பவற்றை உள்ளடக்கிய தூண்டல் பொதியொன்றை அரசாங்கம் முன்வைத்தது.

எனினும் இலங்கையின் சுற்றுலாத் துறையானது இக்காலப் பகுதியில் பாரிய வளர்ச்சி காணவில்லை. இந்த சுற்றுலாத் துறையின் பின்னடைவானது 2009 ஆம் ஆண்டு முதல் 5 மாதங்கள் வரை நீடித்தது எனலாம். அதாவது, இக் காலப் பகுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 18.3 சதவீதம் கொண்ட சராசரி வீதத்தில் வீழ்ச்சியடைந்திருந்த வருகைகள் மே மாதத்தில் அதிகரித்தது.

அதாவது, அடுத்து வந்த 7 மாத காலப் பகுதியிலும் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 20.4 சதவீதம் கொண்ட சராசரி வீதத்தில் வளர்ச்சியடைந்தது. குறிப்பாக 2009 மே மாதத்திற்கு பின் உள்நாட்டு மோதல்கள் முடிவடைந்தமையானது, இலங்கையில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு புதியதொரு யுகத்தினை திறந்திருந்தது.

தமிழர்களுடன் இனப்போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கான அச்சம் நீங்கியது. எனவே சூழ்நிலைகள் மாற்றமடைந்தமையால் சில நாடுகளால் விடுக்கப்பட்ட மோசமான பயண ஆலோசனைகள் புறக்கீடு செய்யப்பட்டன அல்லது தளர்த்தப்பட்டன.

இதனால் 2009இல் சுற்றுலாப் பயணிகளின் வருகை பற்றி பார்க்கையில், பெரும் எண்ணிக்கையினர் இந்தியாவிலிருந்து வந்தனர் (83,634). அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராட்சியத்திலிருந்து வந்தனர் (81,594). அதேபோன்று மாலைதீவு (31,916), ஜேர்மனி (29,654) ஆகிய நாடுகளில் இருந்தும் வருகை தந்தனர்.

மத்திய கிழக்கு, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா என்பவற்றிலிருந்தும் குறிப்பிட்டளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. எனினும் 2009ல் உலகளாவிய பொருளாதார மந்தம் மற்றும் சில நாடுகளில் பரவிய பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய் என்பன மக்களின் பயணத்திற்கு இடையூறாக அமைந்தன. 2009இல் இலங்கையின் சுற்றுலா வருவாய்கள் ஐ. அ. டொலர் 350 மில்லியனுக்கு 2.2 சதவீதத்தினால் அதிகரித்தன.

இலங்கையை மொத்த பன்னாட்டு சுற்றுலா நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் போட்டித் தன்மையைக் கொண்ட நாடாகவே உள்ளது. மேலும் தங்குமிட விடுதிகளை பொறுத்தமட்டில் இலங்கை அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதாவது, தற்போது இலங்கையில் 14,800 தங்குமிட விடுதி அறைகளே உள்ளன.

இதனை 2016 ஆம் ஆண்டு 40 ஆயிரம் அறைகளாக அதிகரிக்க உள்ளதாக அரசு தெரிவிக்கிறது. இதற்காக இலங்கை சுற்றுலா சபையினூடாக 16 ஹோட்டல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

418 அறைகள் கொண்டதாக இவை அமைக்கப்படும். அது தவிர பாசிக்குடா சுற்றுலா பிரதேசத்தில் 1000 அறைகள் கொண்ட 13 ஹோட்டல்களும், கல்லடியில் 350 அறைகள் கொண்ட இரு ஹோட்டல்களும், பெந்தோட்டையில் 250 அறைகள் கொண்ட ஹோட்டலொன்றும் அமைக்கப்பட /{மியி.
மேலும் மத்திய வங்கியின் அறிக்கையின் படி 2010இல் சுற்றுலா வருகைகளின் எண்ணிக்கை 26 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து 577,000 வருகைகளாகி, 2004ல் பதிவு செய்யப்பட்ட 566,000 வருகைகளை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுவதனால், சுற்றுலா விடுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.

சுற்றுலாக் கைத்தொழில் பாரிய வருமானத்தை உருவாக்கக்கூடிய உள்ளார்ந்த வளங்களை கொண்டிருப்பதனை கருத்திற்கொண்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மோதல்களினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அதேபோன்று முதன்மை சுற்றுலா மையங்களாக தெரிவு செய்யப்பட்ட தீவின் மற்றைய பகுதிகளிலும் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது.

அரசாங்கம் தீவின் மிகச் சிறந்த கரையோரம் என அறியப்பட்ட கிழக்கு மாகாணத்தின் முதன்மை பொழுதுபோக்கு மையங்களான அறுகம்குடா, பாசிக்குடா மற்றும் திருகோணமலை போன்ற இடங்களில் உள்ள கரையோர நகரங்களை மேம்படுத்துவதற்கு எண்ணியுள்ளது. கற்பிட்டி மற்றும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகளை கவர்ச்சிகரமான சுற்றுலா அமைவிடங்களாக அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.

மேலும் சுற்றுலாத் துறையை விருத்திசெய்ய வேண்டுமெனில் இலங்கையின் தென்பகுதியில் மாத்தறை ஹிக்கடுவை, மிரிச, அம்பாந்தோட்ட போன்ற இடங்கள் இயற்கை வனப்பு கொட்டிக்கிடக்குமிடங்கள் என்பதனால் இவற்றின் கரையோரத்தை பாதுகாப்பதோடு, இங்கு அமைந்துள்ள விடுதிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையும் சுற்றுலாப் பயணிகளின் பல்வேறுபட்ட பிரிவினரையும் கவரும் விதத்தில் தொடர்ச்சியான விழாக்களையும் ஊக்குவித்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக சூதாட்ட விடுதிகளை சட்டபூர்வமாக்க பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

1978 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சூதாட்ட விடுதிகள் ஒழுங்கில்லாமல் உள்ளதாகவும், அவற்றை ஒழுங்கின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும் அரசு தெரிவிக்கின்றது. முன்பு சூதாட்ட விடுதிகளை தடைசெய்த நாடுகள் கூட அவற்றை இன்று நடைமுறைப்படுத்தியுள்ளன என்று கூறி, உதாரணமாக சிங்கப்பூர் எடுத்துக்காட்டப்படுகிறது.

சூதாட்ட விடுதிகள் சுற்றுலாத் துறையை வளர்க்கக்கூடியதுதான் என்பதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். எனினும் இவை பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் கோவில்கள் முதலிய வணக்கஸ்தலங்கள் போன்ற பொது இடங்களில் அமைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட வயதின் கீழ் உள்ள ஆண்கள், பெண்கள் செல்லமுடியாதவாறு தடைசெய்யப்படுவதோடு, சமூக சீர்கேடுகள் நடைபெறாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சுற்லாத் துறையை விருத்தி செய்ய தங்குமிட விடுதிகள் அழகிய சூழலில் அமைக்கப்பட்டாலும், அவை வாகன இரைச்சல், அசுத்தமான சூழல், சிறு வியாபாரிகளின் அத்துமீறல், திருடர்கள், போதைப்பொருள் பாவனை போன்ற பிரச்சினை இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும். 

மேலும் முக்கியமான சுற்றுலா மையங்களாக விளங்கும் புனிதஸ்தலங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சேதப்படுத்தப்படா வண்ணமும் அசுத்தப்படுத்தப்படா வண்ணமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இலங்கையை உலகிலுள்ள பாதுகாப்பான மற்றும் முக்கியமான சுற்றுலாத்தலமாக டைம்ஸ் சஞ்சிகை தெரிவித்தமை இனிவரும் காலங்களில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக அமையும் எனலாம்.

எனவே சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதாவது விடுதிகள், கடைகள், டக்ஸி மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர், சிறுவியாபாரிகள், படகோட்டி, சுற்றுலாப் பயணிகளின் உதவியாளர்கள் என தொழில்வாய்ப்பு அதிகரிக்கும்.

உதாரணமாக ஹிக்கடுவையில் உள்ள 60 வீதமான மக்கள் சுற்றுலாத்துறை சார்ந்த தொழிலிலேதான் ஈடுபடுகிறார்கள். மேலும் கிழக்கு மாகாணத்தில் புதிதாக 10,000 பேர் சுற்றுலாத்துறைக்கு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு 2 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை அழைத்துவர இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. எனவே சுற்றுலாத் துறையை விருத்தி செய்யும் நோக்கில் அடுத்த வருடம் விஷிட் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அத்தோடு இலங்கையின் சுற்றுலாத்துறை பற்றி சர்வதேச மட்டத்தில் B. B. C. மற்றும் C. N. N. தொலைக்காட்சிகள் மூலம் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவும் இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் எனலாம். மேலும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ளமை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையப் போகின்றது.

இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி!

இலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன.

பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்குமான சாத்தியக்கூற்றைக் கொண்ட துறையாக சுற்றுலாத்துறையானது அண்மைக் காலங்களில்வளர்முக நாடுகள் மத்தியில் அதிகமாக உணரப்பட்டு வருகின்றது. சுற்றுலாத்துறை என்பதற்குப் பல்வேறு வரை விலக்கணங்கள் காணப்படினும் ஐக்கியநாடுகளின் உலக சுற்றுலாத்துறை நிறுவனம் அதைப் பின்வருமாறுவரைவிலக்கணம் செய்துள்ளது.


சம்பளம் பெற்றுக் கொள்ளும் எந்த செயற்பாட்டுடனும் தொடர் பில்லாத,பொழுது போக்கு, வணிகம் மற்றும் வேறு நோக்கங்களுக்காக, 24மணித்தியாலங்களுக்கு குறை யாமலும் தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்குமேற்படாமலும் தமது வழமையான சுற்றுச் சூழலுக்கு வெளியே சென்று அங்குதங்குதலே ஓர் சுற்றுலாச் செயற்பாடாகும்.

மறுபுறத்தில், சொந்த இடங்களுக்கு அப்பால் பயணிக்கும் தனியார் மற்றும்குழுக்களுக்கு வழங்கப்படும் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, குடிவகை,சில்லறைக் கடைகள், உல்லாச வசதிகள், வேறு உபசரணை சேவைகள் ஆகியனஅடங்கிய பயண அனுபவத்தை வழங்கும் செயற்பாடுகள், சேவைகள்,தொழில்கள் என்பவற்றின் தொகுப்பே சுற்றுலாத் துறையாகும்.

முக்கியமான ஓர் சேவைத்துறைச் செயற்பாடாகவுள்ள இத்துறை ஸ்பெயின்,பிரான்ஸ், மெக்ஸிக்கோ, தாய்லாந்து போன்ற பல நாடுகளில் ஏற்கனவேஅதிசயங்களைத் தோற்று வித்துள்ளது. இருந்த போதிலும் உலகின் பலபகுதிகளில் பல அறிவுத் துறைகளுடன் தொடர்புபடும் வணிக மாகசுற்றுலாத்துறை ஆகிவிட்டது. உலகம், உயர்தரத்திலான பொருளாதார வளர்ச்சிமற்றும் அபிவிருத்தி என்பவற்றை நோக்கிச் செல்வதால், சுற்றுலாத்துறைச்செயற்பாடானது பொருளாதார ரீதியாக மிகுந்த வளவாய்ப்புக்களைகொண்டதாக மனிதச் செயற்பாடுகளால் அதிகளவுக்கு வழிப்படுத்தப்படுகின்றது.

உலகமயமாதல் மிகவும் முக்கியத் துவம் பெற்றுள்ள இப்புதிய பொரு ளாதாரஒழுங்கு காரணமாக சர்வதேச சுற்றுலாத்துறையின் வீச்சு விசாலித்துவருகின்றது என்றே கூறவேண்டும். வறிய மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு மிக அவசியமாகத் தேவைப்படும் அந்நிய செலாவணி வருமானங்களைப் பெற்றுத் தருவ தாலும், சுற்றுலாப் பயண இலக்குகளுக்கு மறைமுகமாக அதிகளவு வாய்ப்புக்களைக் கொண்டு வருவதாலும் சர்வதேச சுற்றுலாத்துறை மேலதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.

சுற்றுலாத்துறை தற்போது ஆண்டுக்கு ஒரு றில்லியன் அமெரிக்க டொலருக்குமேல் வருமானம் ஈட்டுகின்ற உலகின் மிகப் பெரிய தொழில்களில் ஒன்றாகஉள்ளது. சர்வதேச வர்த்தகத்தின் வரிசைப் படுத்தலின் படி எரிபொருட்கள்,இரசாயனங்கள் மற்றும் மோட்டார் வாகன உற்பத்திப் பொருட்கள் என்பவற்றிற்கு அடுத்து நான்காவது நிலையிலுள்ள ஏற்றுமதி வகையாகசுற்றுலாத்துறை உள்ளது.

1993- 2010 காலப் பகுதியில் உலக சுற்றுலாத்துறை வளர்ச்சியானது 04 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடருமாயின் இரண்டு தசாப்தங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்குகளாக அதிகரிக்கும். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமானது 1990 – 2000 காலப் பகுதியில் 2.9 சதவீதமாகவும், 2000-2008 காலப்பகுதியில் 3.2 சதவீதமாகவும் காணப்பட்டது.

ஆனால் ஆண்டுக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையின் வளர்ச்சி வீதம் 3.7 சதவீதமாகவும் உலகளவில் சுற்றுலாப் பயணிகளிட மிருந்து பெற்ற வருமானத்தின் வளர்ச்சி வீதம் 6.3 சதவீதமாகவும் இருந்து வருகின்றது. இதன் மூலம் சுற்றுலாத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் விரைவாக,அதிலும் இச்சுற்றுலாத்துறையானது சேவைத் துறையில் அதிகளவுக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளபோதும், அச்சேவைகள் மற்றும் தயாரிப்புக் கைத்தொழில் போன்ற பரந்த துறைகளை விடவும் விரைவாக வளர்வதற்கான வளவாய்ப்பைக் கொண்டுள்ளதென உய்ர்த்தறிய முடிகின்றது.

இத்துறையானது ஒரு நாளைக்கு 03 பில்லியன் அமெரிக்க டொலர்வருமானத்தை நெருங்குவதாக உள்ளது. 2010 இல் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை 935 மில்லியனாகக் காணப்பட்டது. இது 2009ம் ஆண்டுடன்ஒப்பிடுமிடத்து 7 சதவீத வளர்ச்சியைக் காட்டுகின்றது. சுற்றுலாத் துறையானது உலக ஏற்றுமதி வர்த்தக சேவைகளில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகவும், மொத்தப்பொருட்கள் சேவைகளின் ஏற்றுமதியில் 06 சதவீதமாகவும் உள்ளது.

சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஓர் உலகளாவிய ஒன்றிணைப்பின் பலமான குறிகாட்டியாகவும் இது உள்ளது. 2020 அளவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.6 பில்லியனாக இருக்குமென உலக சுற்றுலா நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

அண்மைக் காலமாக பல பிராந்தியங்கள் குறிப்பாக ஆபிரிக்கா ஆசிய-பசுபிக்மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் துரித வளர்ச்சிப் போக்கை காட்டுகின்றன. ஆனால் முன்பு பலமான நிலையில் காணப்பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்களில் இவ்வாறான வளர்ச்சிப் போக்கை காணமுடிவதில்லை.

உலக சுற்றுலாத்துறை, கடந்த இரண்டு தசாப்தங்களில் துரித வளர்ச்சிப் போக்கைக் காட்டியுள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் பிராந்தியங்களிலுள்ள இடங்கள்,முக்கியத்துவம் பெற்று வருவதனால் உலக சுற்றுலாத்துறையின் போக்கு மாற்றங்கண்டு வருகின்றது. வளர்ந்து வரும் சர்வதேச சுற்றுலாத்துறை மூலம் உலகில் அதிகரித்துள்ள செல்வத்தை தமது பொருளாதார வளர்ச்சிக்காகத் தாமும் பகிர்ந்துகொள்ளும் வகையில் வளர்முக நாடுகள் உபாயங்களை வகுப்பதற்காக தமது கொள்கைகள் மற்றும் சுற்றுலாத்துறைக் கருவிகள் என்பவற்றை மாற்றியமைத்து வருகின்றன.

2011 இல் முன்னெப்பொழுதுமில்லாத மிக உயர்ந்த சுற்றுலா வருகையான 855,975 பதிவு செய்யப்பட்டதுடன் இது 2010 உடன் ஒப்பிடுகையில் 30.8 சதவீதமானதொரு வளர்ச்சியாகக் காணப்பட்டது. குறிப்பாக மிகக் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும் (171, 374) ஐக்கிய இராச்சியம் (106, 082), ஜேர்மனி (55, 882), பிரான்ஸ் (48, 695), மாலைதீவு (44, 018),அவுஸ்திரேலியா (41,728)ஆகிய நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு வருகைதந்தனர். மத்திய கிழக்கிலிருந்தான சுற்றுலா வருகைகளும் 33.2 சதவீதத்தினால் அதிகரித்தன.

2011 இல் சுற்றுலாவிலிருந்து பெறப்பட்ட வருவாய்கள் ஐ. அ. டொலர் 830 மில்லியன் வரையில் அதிகரித்தது. இதனை முன்னைய ஆண்டுகளுடன்ஒப்பிடும்போது 44.2 சதவீத அதிகரிப்பினை காட்டி நிற்கின்றது. 2010 இல் சுற்றுலாப் பயணி ஒருவரினால் இரவொன்றிற்கு செலவிடப்பட்ட சராசரித்தொகை ஐ.அ.டொலர் 88. 2011 இல் இது 97 ஐ.அ.டொலர் என்றளவிற்கு அதிகரித்துச் சென்றது. 2011 சுற்றுலா வருகையின் நோக்கத்தைப் பார்க்கும் போது 77% வீதத்தினர் விடுமுறையை கழிப்பதற்காகவும் 8% வீதத்தினர் வியாபார நோக்கங்களுக்காகவும் வருகை தந்ததுடன், மிகுதியினர் நண்பர்கள்,உறவினர்களைப் பார்ப்பதற் காகவும், மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் சமய,கலாசார நோக்கங்களுக்காகவும் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.

'இலங்கைக்கு விஜயம் செய்யுங்கள்' 2011 நிகழ்ச்சித் திட்டம் புதிய சந்தைகளிலிந்து சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கு உதவியது. சீனா, ரஷ்யா,ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு போன்ற தோற்றம் பெற்று வரும் சந்தைகளிலிருந்தான அதிகரித்த வருகைகள் 2011 இல் காணப்பட்டது. 2011 இல் இலங்கையின் 08 தனித்துவமான தொனிப்பொருட்களின் கீழ் சுற்றுலாத்துறை விருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கடற்கரை,பாரம்பரியம், இயற்கை வனப்பு, கானக விலங்குகள், விழாக்கள், விளையாட்டுமற்றும் துணிகர சாகசங்கள், மகிழ்ச்சி மற்றும் சாராம்சங்கள் என்பவற்றின் கீழ் இடம்பெற்றன.

உற்பத்திச் சாதன அபிவிருத்திக்காக புதிய அமைவிடங்கள் குறிப்பாக கல்பிட்டி,பாசிக்குடா, டெருவ, குச்சவெளி ஆகிய இடங்களிலிருந்து வாகரை, யால,அம்பாந்தோட்டை, சிலாபத்துறை மற்றும் யாழ்ப்பாணம் வரைவிரிவாக்கப்பட்டன. 2011 இல் புதிய சுற்றுலாச் சட்டமொன்று உருவாக்கப்பட்டது.

இது ஒரே சட்டத்தின் கீழ் தற்போதுள்ள 04 நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களாக அதாவது, இலங்கை சுற்றுலா அதிகார சபை, இலங்கை சுற்றுலா நிறுவனம் மற்றும் சுற்றுலா விடுதி முகாமைத்துவம் என இரு நிறுவனங்களாகஒருங்கிணைந்து விரைவாக வளர்ந்து வரும் சுற்றுலாக் கைத்தொழிலின் சவால்களை எதிர்கொள்வதற்காக பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான கூடியளவு வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top