Contact Us

Name

Email *

Message *

பல்லவ மன்னர்களின் வரலாறு.

பல்லவ மன்னர்களின் வரலாறு.



பல்லவர்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்கான பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின் சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள்.




பல்லவர் தென்னிந்தியாவில்  களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள்.



இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு.

அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. 'வின்சென்ட் ஸ்மித்' என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். 

சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர்.[போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தை ஆளத் தொடங்கினர்.

தமிழகத்தின் இருண்ட காலமாக சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் களப்பிரர்களின் ஆட்சிகாலத்தில் தமிழும் தமிழ்ப் புலவர்களுக்கும் விரட்டி விரட்டி கொல்லப்பட்டனர், மத சுதந்திரமில்லாத நிலை. இந்த இருண்ட ஆட்சியை விரட்டி பலம்மிக்க அரசமைத்தனர் பல்லவர்களும் பாண்டியர்களும்.ஆறு நூற்றாண்டுகள் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்தனர்

பல்லவர்களின் காலத்தில் கலை மிகவும் சிறந்தது விளங்கியது, யுவான் சுவாங் என்ற சீனப் பயணி பல்லவ ஆட்சிப் பற்றியும் கலைப் பற்றியும் மிகப் பெருமையாக குறிப்பிட்டுள்ளார், கம்போடியா,ஜாவா நாடுகளின் பல புகழ்பெற்ற கோவில்கள் பல்லவர்களின் கட்டிட கலையை சார்ந்தவைகள், உலக அதிசயமான ஆங்கர் வாட்டை (கம்போடியா) உருவாக்கிய சூரியவர்மன் II மற்றும் ஜெயவர்மன் என்ற அரசர்கள் பல்லவர் வழி வந்தவர்கள் என சில குறிப்புகள் வரலாற்றாசிரியர்கள் சிலரால் தரப்படுகின்றன, வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின் பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான்.

மாமல்லபுரம், காஞ்சி கோவில்கள் எல்லாம் அவர்களின் கட்டிட கலைக்கான சான்றுகள்,

மாமல்லபுர குகைக் கோயில்கள் சிற்பங்கள் உலகின் தலை சிறந்த கட்டிட கலைக்கான சான்றுகள்.

வீரத்திலும் யாருக்கும் குறைந்தவர்களில்லை, மொத்த தமிழினமும் களப்பிரர்களிடம் அடிமைபட்டிருந்த போது அதிலிருந்து மீட்டதில் பெரும் பங்கு பல்லவர்களுக்கு.

ஆறாம் நூற்றாண்டில் சிம்ம விஷ்ணு என்ற பல்லவ அரசன் இலங்கையையும் மற்ற பிற தென் மாநில அரசுகளையும்( சோழர்களையும் சேர்த்து) வெற்றி கொண்டு பல்லவ பேரரசின் கீழ் கொண்டு வந்தார்,எல்லையிலிருந்த சாளுக்கியர்களுடன் நடந்த போர்களும் பாண்டியர்களுடன் நடந்த போர்களில் பெற்ற வெற்றியும் பல்லவர்களின் வீரத்தை பறைசாற்றுகின்றன, யாராலும் முறியடிக்கப்படமுடியாமலிருந்த இரண்டாம் புலிகேசி (ஹர்ஷவர்த்தனர் என்ற வட நாட்டு பேரரசரே இவரிடம் தோல்வியுற்றார்) நரசிம்ம வர்மருடனான வாதாபி போரில் உயிரையும் இழந்து வாதாபி நகரே தீக்கிரையானது.

கலைகளில் சிறந்து விளங்கினர், வீரத்தில் சிறந்து விளங்கினர், 
  • சின்னம்: காளை.
  • தலைநகர்: காஞ்சிபுரம்.


கி.பி.600க்கு முந்தைய பல்லவ வரலாற்றுக்கு தெளிவான சான்றுகள் கிட்டவில்லை. சன்மானம் வழங்கி குறிக்கபட்ட செப்புப் பட்டயங்களில் சிவகந்தவர்மன்,
விஷ்ணு கந்தவர்மன், விஷ்ணு கோபன், புத்தவர்மன் ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன.

பல்லவர்கள் ஒரு புறமும், பாண்டியர்கள் மற்றொரு புறமும் தொடர்ந்த தாக்குதல்களால் மதுரையை ஆண்ட களப்பிரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சிம்மவிஷ்ணுவின் பரக்கிரமங்கள் பல்லவ ஆட்சியை காவேரிக்கரை வரை நீட்டியது.

முதலாம் மஹேந்திரவர்மன் புகழ் பெற்று விளங்கினான். தேர்ந்த கவிஞன், பாடகனும் கூட. தனிப் பாறையை குடைந்து கோவில் கட்டும் புதிய முறையை புகுத்தினான். சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினான்.

பல்லவர்களுக்கு சாளுக்கியர்கள் எப்போதுமே எதிரிகள். மஹேந்திரவர்மனுக்கு சாளூக்கிய இரண்டாம் புலிகேசி தொடர்ந்து தொல்லை கொடுத்தான். முதலாம் நரசிம்மவர்மன் சாளூக்கியரை வென்றான். இலங்கையில் மனவர்மனுக்கு மீண்டும் மணிமுடி சூட்டினான். இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்) அராபியர்களுடன் போரிட்டு சீனத்திற்கு வர்த்தக வழிகளை நிலைநிறுத்தினான்.

கடைசியில் நிருபதுங்கனுக்கும் அபராஜிதனுக்குமிடையில் ஏற்பட்ட வாரிசு மோதலில், அபராஜிதனுக்கு உதவிக்கு வந்த சோழன் அவர்களை வென்றான். பின்னர் பல்லவர்கள் சிற்றரசர்களாயினர்.

பல்லவரின் தோற்றம் பற்றிய கூற்றுகள்.

வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.

தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 650 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய வரலாறுபற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்க வில்லை. இவர்கள் தமிழர்களே என ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி பாரசீகம்,ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட  சாசனங்களின்  மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள்.  பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள்  பெல்லாரி,  குண்டூர்  மற்றும்  நெல்லூர்  ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

தென்னிந்தியர்.

இந்திய வரலாறு நூலாசிரியரான 'வின்ஸென்ட் ஸ்மித்' என்பார், தமது 'பழைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற்பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஹலவர் என்னும் பாரசீக மரபினர்' என்றும், இரண்டாம் பதிப்பில் 'பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம்' என்றும், மூன்றாம் பதிப்பில், பஹலவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து பாரசீகர் எனக் கூறல் தவறு. 'பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர்' என்றும் முடிவு கூறியுள்ளார்.

ஆயினும் , ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், 'பஹலவர், மரபினரே பல்லவர்' என்று முடிவு செய்தார். பேராசிரியர் துப்ராய் என்பவர், 'கி.பி. 150 இல் 'ருத்ர தாமன்' என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஹலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். கிடைத்துள்ள பட்டயங்களில் காணப்படுபவர் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்' என்று வரைந்துள்ளார். இங்ஙனம் பல்லவர் என்பர் பஹலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர்.

இலங்கையர்.

இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர். 'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவளை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் 'திரையன்' என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன்பெரும்பாணாற்றுப் படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவான்' என விளக்கியுள்ளார்.

யாழ்ப்பாணம். 

யாழ்ப்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து - sprout)போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும், 'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில்குறிக்கப்பட்டிருத்தலால் மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன், தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலிருந்து வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறப்படவில்லை. 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான பள்ளி மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர்.

பல்லவர் தமிழர் அல்லர்வின்செண்ட் ஸ்மித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்தமுடையதாகத் தெரிகின்றது. பிராக்ருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவப் பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ 'பல்லவர் பஹலவர் மரபினர்' என்றோ, வேற்று நாட்டவர் என்றோ. 'திரையர் மரபினர்' என்றோ, 'மணிபல்லவத் தீவினர்' என்றோ குறிக்கவில்லை. சங்ககாலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ்கந்தவர்மன், 'புத்தவர்மன்' வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது. மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது எனலாம். பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர்கள் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர், தம்மைப் 'பாரத்வாச கோத்திரத்தார்' என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; இன்ன பிற காரணங்களால், பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம்.

பல்லவர் பஹலவர் மரபினர்பஹலவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். இவர்கள் தொண்டைமண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம், காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர்.பஹலவ மன்னர்கள் தங்கள் சின்னமாக நெருப்பைக் கொண்டிருந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நெருப்பு எரிவதை தங்களது சின்னமாகவும் தங்களது சிற்பங்களிலும் வடித்து வைத்திருந்தனர். அதுவே பல்லவர்களும் செய்தது. பல்லவர்களது சின்னமாக இருந்ததும் நெருப்பு சட்டியே. பல்லவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கூற்றும் நிலவுகிறது.

தொண்டைநாடும் சங்கநூல்களும்

வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும்வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடுகி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல்தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவாவடதலைநாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது - முன்னதில் காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும். காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படுகிறது.

வடக்கே இருந்த அருவாவடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் 'பாவித்திரி' என்பது. அஃது இப்பொழுதைய கூடூர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம் என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்திநாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். இங்ஙனம் தொண்டை மண்டலம் கரிகால் சோழன்  காலத்தில் சோழர் ஆட்சிக்கு வந்தது எனப் பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில்காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன். தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப்  பெரும்பாணாற்றுப் படையில் சிறப்பிக்கப்படுகிறான். இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் பல்லவர் ஆட்சிக்கு முன்னிருந்த தொண்டை நாடு பற்றி அறிய முடிகிறது.

  • முற்காலப் பல்லவர்கள்.
  • முற்காலப் பல்லவர்களில் 
  • பப்பதேவன், 
  • சிவகந்தவர்மன், 
  • விசய கந்தவர்மன், 
  • இளவரசன் புத்தவர்மன், 
  • புத்யங்குரன் 

ஆகிய ஐவரது பெயர்கள் மயித ஹோலு, ஹீரஹதகல்லி, குணபதேய என்ற மூன்று இடங்களில் கிடைத்த படயங்களின் மூலம் வெளிப்பட்டன.  இவர்கள் காலத்தில் ஆந்திரப் பகுதியும் தொண்டை நாட்டின் வடபகுதியும் பல்லவ நாடாக விளங்கின.

இடைக்காலப் பல்லவர்கள்.

இடைக்காலப் பல்லவர்கள்இடைக்காலப் பல்லவர்களின் காலம் கி.பி. 340 முதல் கி.பி. 615 வரை நீண்டது.

விட்ணுகோபன் I
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்கந்தவர்மன் II
சிம்மவர்மன் I
விட்ணுகோபன் II
குமாரவிட்ணு II
கந்தவர்மன் III
சிம்மவர்மன் II
புத்தவர்மன்நந்திவர்மன் I
விட்ணுகோபன் III
குமாரவிட்ணு III
சிம்மவர்மன் III
என பதின்மூன்று பேர்களின் விவரங்கள் கிடைக்கின்றன.

பிற்காலப் பல்லவர்கள் மரபு.

பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன்,இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என ஒரு மரபு நீள்கிறது. பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன.

பிற்காலப் பல்லவர்கள்.

  • சிம்மவர்மன். கிபி 550
  • சிம்மவிஷ்ணு. கிபி 555 - 590
  • மகேந்திரவர்மன் I. கிபி 590 - 630
  • நரசிம்மவர்மன் I(மாமல்லன்). கிபி 630 - 668
  • மகேந்திரவர்மன் II. கிபி 668 - 672
  • பரமேஸ்வரவர்மன். கிபி 672 - 700
  • நரசிம்மவர்மன் II(ராஜசிம்மன்). கிபி 700 - 728
  • பரமேஸ்வரவர்மன் II. கிபி 705 - 710
  • நந்திவர்மன் II(பல்லவமல்லன்). கிபி 732 - 796
  • தந்திவர்மன். கிபி 775 - 825
  • நந்திவர்மன் III. கிபி 825 - 850
  • நிருபதுங்கவர்மன். கிபி 850 - 882
  • அபராஜிதவர்மன். கிபி 882 - 901
  • கம்பவர்மன். கிபி 902 - 912



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top