Contact Us

Name

Email *

Message *

மக்களுக்குப் புரியாத சமாச்சாரமல்ல இது....

மக்களுக்குப் புரியாத சமாச்சாரமல்ல இது....

மக்களுக்குப் புரியாத சமாச்சாரமல்ல இது!



புதிய அரசியலமைப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரும் இப்போது மீண்டும் உரத்துப் பேசத் தொடங்கியுள்ளனர். தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென்று அரசாங்க தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் இப்போது பேசுவதை அவதானிக்க முடிகின்றது. மறுபுறத்தில் எதிரணியைச் சேர்ந்த எதிர்க் கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவும் அவரது தரப்பினரும் வழமையைப் போலவே இப்போதும் புதிய அரசியலமைப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

உத்தேச அரசியலமைப்பானது நாட்டைத் துண்டாடுவதற்கான முயற்சியென்றும் கூறி பெரும்பான்மையினத்தவரை அவர்கள் பீதிக்குள்ளாக்குகின்றனர். அது மாத்திரமன்றி, தாங்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்ததும் நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கும் அரசியலமைப்பே நாட்டுக்குப் பொருத்தமாகவிருக்கும் என்றும் அவர்கள் தற்போது கூறி வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் மறுதரப்பில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், புதிய அரசியலமைப்பை உருவாக்கியே தீருவதென்று அம்மக்கள் மத்தியில் தற்போது கூறி வருவதைக் கேட்க முடிகின்றது.

இதேசமயம் வடக்கு, கிழக்கு முஸ்லிம் அரசியல் தரப்பிடமிருந்து வழமை போன்று புதிய அரசியலமைப்பு விடயத்தில் கருத்துக் கூறல்களைக் கேட்க முடியாதிருக்கிறது. தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலோ இன்றேல் உத்தேச அரசியலமைப்பு தொடர்பாகவோ முஸ்லிம் அரசியல் தரப்புகளிடம் உறுதியான கொள்கைத் திட்டமொன்று இதுவரை இருந்ததில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தீவிரமடைகின்ற வேளையில் மாத்திரம், முஸ்லிம் அரசியல் தரப்புகளிடமிருந்து காரசாரமாக கருத்துகள் வெளிவருவது வழமை. அக்கருத்துகள் தேசியப் பிரச்சினைத் தீர்வு முயற்சிகளுக்கு அனுகூலமாக இருந்ததுமில்லை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, புதிய அரசியலமைப்பு தொடர்பாக இப்போது அரசியல் தலைவர்கள் உரத்துப் பேசத் தொடங்கியிருப்பதற்கான காரணம் என்னவென்பதையிட்டு ஆராய்வது இவ்விடத்தில் அவசியம். அதுவும் 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்கரை வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் இவ்வேளையிலா புதிய அரசியலமைப்பு தொடர்பாக எமது அரசியல் தலைவர்கள் பேச வேண்டியிருக்கிறது என்பதுதான் முக்கியமான கேள்வி!

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பத்து வருட ஆட்சிக் காலத்தின் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வில் முழுமையான அவநம்பிக்கை ஏற்பட்டிருந்த வேளையிலேயே 2015 இல் ஆட்சி மாற்றம் நடந்தது. இனப்பிரச்சினைத் தீர்வில் முற்றாக ஏமாற்றத்துக்குள்ளான வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வெறுப்புணர்வின் வெளிப்பாடுதான் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலியதெனக் கூறுவதில் தவறில்லை. தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு நின்றதனாலேயே மஹிந்தவின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, புதிய ஆட்சி கொண்டுவரப்பட்டதென்பது வெளிப்படையான உண்மை!

வடக்கு, கிழக்குத் தமிழர்கள் இனப்பிரச்சினைத் தீர்வை அடிப்படையாக வைத்தே முன்னைய ஆட்சியைத் தோற்கடித்தனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தரக் கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென்ற நம்பிக்கையிலேயே வடக்கு-, கிழக்குத் தமிழர்கள் மைத்திரி_-ரணில் கூட்டணியை 2015 இல் நடைபெற்ற இரு தேர்தல்களிலும் ஆதரித்தனர்.

முஸ்லிம்கள் 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைத் தோற்கடிக்க முடிவெடுத்தமைக்குக் காரணம் அவர்கள் மீதான மதவிரோத செயற்பாடுகளே ஆகும். முன்னைய ஆட்சியின் போது மதரீதியாக முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டதனாலேயே அவர்கள் அன்றைய ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்கரை வருடங்கள் உருண்டோடி விட்டன. ஜனாதிபதி மைத்திரியினதும், பிரதமர் ரணிலினதும் நல்லிணக்கப் பயணமானது சில காலமே சீராகத் தொடர்ந்தது. அவ்வேளையில் அனைத்து விவகாரங்களிலும் அரசின் பயணம் தடையின்றியே தொடர்ந்தது. நிறைவேற்று அதிகாரத் தலைமையுடனும், பாராளுமன்ற பெரும்பான்மை கொண்ட அரசுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்த நெருக்கமும் புரிந்துணர்வும் மிகவும் வலுவாக இருந்தன. புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான நகர்வுகளையும் அவ்வப்போது அவதானிக்க முடிந்தது. அதேசமயம், இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான உத்தேச அரசியலமைப்பை ஏற்படுத்துவதில் இடம்பெற்ற வீணான காலதாமதத்துக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதே தமிழ் மக்கள் குற்றம் சுமத்தினர்.

புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நகர்வுகளும் குறிப்பிட்ட சில காலத்துக்கு மாத்திரமே தொடர்ந்தன. இதனை இன்னும் விரிவாகக் கூறுவதானால் மைத்திரி_- ரணில் கூட்டணிக்குள் முரண்பாடு உருவெடுக்கும் வரையே, புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகளும் நகர்வுகளும் தொடர்ந்தன. நல்லாட்சிக்குள் முரண்பாடு தலைதூக்கியதும் உத்தேச அரசியலமைப்பு முயற்சிகளெல்லாம் பின்தள்ளப்பட்டுப் போய் விட்டன. அதன் பிறகு சில காலத்துக்கு இனப்பிரச்சினைத் தீர்வு பற்றியோ அல்லது புதிய அரசியலமைப்பு குறித்தோ எவரும் பேசியதில்லை. அவ்விடயங்களை பொருட்படுத்தக் கூடியதான அரசியல் சூழல் நாட்டில் நிலவவும் இல்லை.

ஆனால் புதிய அரசியலமைப்பு தொடர்பாக இப்போது பலதரப்பினரும் பேசுகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பும் அவர்களுக்கு நெருக்கமான அரசு தரப்பும் தற்போது புதிய அரசியலமைப்பின் அவசியம் குறித்துப் பேசுகின்றன. புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முயற்சிக்கப் போவதாகவும் கூறுகின்றன. உண்மையில் இதுவொரு நடைமுறைச் சாத்தியமான விடயம்தானா என்ற வலுவான சந்தேகம் மக்கள் மத்தியில் உண்டு. அதேசமயம், நடைபெறப் போகின்ற தேர்தல்களை இலக்கு வைத்தே அரசியல் தீர்வு குறித்து அரசியல்வாதிகள் இப்போது பேசத் தொடங்கியுள்ளனர் என்றுதான் மக்கள் நினைக்கின்றார்கள்.

ஒவ்வொரு தேர்தலும் நெருங்கும் வேளையில் இனப்பிரச்சினைத் தீர்வு தூசு தட்டப்படுவதும், தேர்தல் முடிவடைந்த பின்னர் கிடப்புக்குள் போடப்படுவதும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதுமையானவையல்ல. பிரதானமாக தமிழ் மக்களுக்கு இது புரியாத சமாச்சாரம் அல்ல!



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top