Contact Us

Name

Email *

Message *

இலக்கில்லாத ஏட்டுக்கல்வியால் பரிதவிக்கும் பட்டதாரிகள்

இலக்கில்லாத ஏட்டுக்கல்வியால் பரிதவிக்கும் பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இதன் முதற்கட்டமாக 3,880 பேருக்கும் அதிகமானோருக்கு அரசாங்கத்துறைகளில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கம் தொழில் வாய்ப்பு வழங்க வேண்டுமெனக் கோரி வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கக் கூடியது.  


இலட்சக் கணக்கான பட்டதாரிகள் தொழில்கேட்டு தெருவில் நிற்பதையும் தற்கொலைக்கு முயற்சிப்பதையும் எந்த வகையிலும் ஏற்க முடியாது. கல்விச் சமூகமொன்று வாழ்வை நெறிப்படுத்துவதற்காக தெருக்களில் பதாகைகளுடன் நிற்பது பெரும் கவலைக்குரியது. 

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டாலும், புதிய பிரச்சினையொன்றும் இப்போது தலையெடுத்திருக்கிறது. 

வெளிவாரிப் பட்டதாரிகளைப் புறக்கணித்து உள்வாரிப் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாக அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முறையாகக் கற்கை நெறியை (4 அல்லது 5 வருடங்கள்) பூர்த்தி செய்தவர்களே உள்வாரிப்பட்டதாரிகளாவர். அதே நேரம் பல்கலைக்கழகம் செல்லாமலே அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் வெளியிலிருந்தே பரீட்சை எழுதி சித்தியடைந்தவர்களே வெளிவாரிப் பட்டதாரிகளாவர். 

இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்குள் இருதரப்புமே பட்டதாரிகள்தான். என்றாலும், உள்வாரிப் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறதென்பதே வெளிவாரி பட்டதாரிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. தங்களையும் அரசு, கவனத்திலெடுக்க வேண்டுமெனக் கோரி மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டங்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

உண்மையில், அரசாங்கம் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இவர்களை புறக்கணித்தால் ஆரோக்கியமான செயலாகக் கருத முடியாது. வெளிவாரிப்பட்டமென்பது அவர்களாகத் தேடிக் கொண்டதல்ல.  

அரசின் கல்விக் கொள்கைக்கமைய படித்துப் பட்டம் பெற்றவர்களென்பதை நாம் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

வெளிவாரிக் கல்விக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் போதே அதற்கான வரையறைகளை அரசாங்கங்கள் வகுத்திருக்க வேண்டும். அப்போதைய சூழ்நிலைகளால் நாட்டுக்கு பட்டதாரிகளின் தேவை அதிகம் இருந்தது. இப்போது நாம் தேவையையும் தாண்டி சென்றுவிட்டோம் என்பதே யதார்த்தம். 

கல்வியமைச்சின் கணிப்பீட்டின் படி, சுமார் 16,000 வெளிவாரிப்பட்டதாரிகள் இருக்கின்றனர். இவர்களை, எழுந்தமானமாகக் கைவிட்டுவிட முடியாது. இவர்களும் நாட்டின் எதிர்காலச் சொத்துக்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.  

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாக மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உறுதியளித்து வந்துள்ளன. ஒவ்வொரு கட்சியினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புகள் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டே வருகின்றன. 

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் இருக்கிறது. என்றாலும் இத்தனை ஆயிரம் பேருக்கும் தொழில் வழங்குவதென்பது இலேசான காரியமில்லை. அனைத்துப்பட்டதாரிகளுமே அரசாங்கத் தொழிலை எதிர்பார்க்கிறார்கள். இந்த இடத்தில் தான் அரசாங்கம் தடுமாறுகிறது.  அரசாங்கத்தின் தடுமாற்றமான நிலையை நாம் தட்டிக்கழிக்க முடியாது. நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டுதான் அரசு தீர்மானிக்க முடியும். இலட்சக் கணக்கான பட்டதாரிகளுக்கு அரசாங்கத் தொழில் வழங்குவதென்பது நாட்டின் பொருளாதாரத்தோடு நேரடித் தொடர்புபட்டது. 

என்றாலும், மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் திட்டமிடல் தவறுகளும் பட்டதாரிகள் விடயத்தின் பின்னணியில் இருக்கின்றதென்பதை நாம் சொல்லியே ஆக வேண்டும்.  

நம் நாட்டில் தனியார்துறை ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும், தொழில் வாய்ப்புக்களில் பெரும் குறைபாடு இருக்கின்றன. உண்மையைச் சொன்னால், உத்தரவாதமில்லாத தொழில்துறையாக தனியார் துறை இன்று கணிக்கப்படுகிறது. இளம் சந்ததியினர் தனியார் துறையை நாடாமல் பின்வாங்குவதற்கு இதுவே காரணமாக அமைகிறது. 

பொருளாதார நலன்களைச் சீரமைக்கும் நம்பிக்கையுள்ள துறையாக, தனியார் துறையை அரசு கட்டியெழுப்பியிருந்தால் பட்டதாரிகள் அரசாங்கத்தை நாடும் நிலையை மட்டுப்படுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கும். 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் பட்டதாரிகளோ, அல்லது புத்தி ஜீவிகளோ அரசாங்கத் தொழிலை நாடிச் செல்வதில்லை. ஜேர்மன், பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் சகலரும் தனியார் துறையை நம்பிக்கையோடு ஏற்று தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கத் தொழில்த்துறையை விடவும் கூடுதலான வசதிவாய்ப்புக்களும், அதிக சம்பளமும் தனியார் துறையில் கிடைப்பதால், அந்த நாடுகளிலுள்ளோர் அரசாங்கத்தொழில் பெறுவதில் விருப்பம் கொள்வதில்லை. 

நம் நாட்டில் நிலைமை தலைகீழாகவே இருக்கின்றது. தனியார் தொழில் துறையில் பட்டதாரிகள் விரும்பாததற்கு மேற்சொன்ன விடயங்கள் பொருந்தினாலும், வேலை வாய்ப்புச் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்கலைக்கழகங்களின் கற்கை நெறிகளும் நன்கு திட்டமிடப்படவில்லையென்பது பெரும் குறையாகவே பார்க்க முடிகிறது. 

பட்டங்களை மட்டும் வழங்கும் உயர் ஸ்தானமாக பல்கலைக்கழகங்கள் இருக்காமல், தொழில் வாய்ப்புக்கேற்ற புத்தி ஜீவிகளை உருவாக்கும் நிறுவனங்களாக மாற வேண்டும். கடந்த காலங்களை விட இப்போதைய கற்கை நெறிகளில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறதென்பதை நாம் உளப்பூர்வமாக ஏற்கிறோம். பட்டதாரிகளினுடைய இன்றைய நிலைக்கு பல்கலைக்கழகங்களும் பொறுப்பாளிகள் என்பதை நிராகரிக்க முடியவில்லை. 

அரசு தொழில் வழங்க வேண்டுமென போராடும் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் கலைப்பட்டதாரிகளாகவே இருக்கின்றனர். தொழில் தகைமையை ஏற்று கடமையாற்றும் அளவுக்கு இவர்களின் கற்கை நெறி வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. இது மாணவர்களது (பட்டதாரிகளின்) குற்றமில்லை. 

இலவசக் கல்வி... இலவசக் கல்வி எனக் கூறிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது, மனித வளங்களைச் சரியாகப் பயன்படுத்தும் அளவுக்கு நமது கற்கை நெறிகள் வடிவமைக்கப்படவில்லை. 

பட்டதாரிகளும் புத்திஜீவிகளுந்தான் ஒரு நாட்டின் மிகப்பெரிய மனித வளம். ஏனென்றால், நாட்டின் பொருளாதாரத்துக்கு பெறுமதி சேர்க்கக் கூடியவர்கள் இவர்கள் தான். ஆகவே, நம் நாட்டின் பட்டதாரிகளும் தொழில் தகைமைக்கு ஏற்ப வளப்படுத்தப்பட வேண்டும். 

அரசாங்கம் எமது புத்திஜீவிகளுக்குத் தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக அல்லது தேர்தலை இலக்காகக் கொண்டு வழங்கப்படுகின்ற எந்தவொரு நியமனமும் பொருளாதாரச் சுமையாகவே மாறும், வரி செலுத்துவோரும் இதன் சுமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். 

வேலையில்லாப் பிரச்சினைக்கும் தற்போதைய பட்டதாரிகளின் பிரச்சினைக்கும், அரச தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதென்பது ஒரு தற்காலிகத் தீர்வாகவே அமையும் என்பதை மறந்துவிடக்கூடாது. நாட்டின் பொருளாதாரத்தை நன்கு திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்தியை மேற்கொண்டால், பட்டதாரிகளின் சுமையை அரசு ஏற்கும் நிலை ஏற்படாது. நமது பொருளியல் நிபுணர்களும் கல்விமான்களும் இந்த நிலையை ஏற்படுத்த நன்கு உழைக்க வேண்டும். திட்டமிடல் இல்லாத எந்த நாடும் எப்போதும் பதற்றத்துடனேயே இருக்குமென்பதை மனதில் கொண்டு செயற்படவேண்டும். 

பட்டதாரிகள் தனியார் துறையில் தொழில் வாய்ப்பைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லையென்ற குற்றச்சாட்டு இருக்கிறது. உண்மைதான், இதற்கு அவர்களை மட்டும் குற்றம் சுமத்துவது அடிப்படையின் அறியாமை என்று தான் சொல்லலாம். தனியார்துறையை சரியாக அபிவிருத்தி செய்திருந்தால் பட்டதாரிகள் அரசாங்கத்தை மட்டும் நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. 

ஆகவே, பொருளாதாரத்தை காலத்துக்கேற்ப மாற்றியமைக்கும் செயல்திட்டங்களின் மூலமே துரித அபிவிருத்தி ஏற்பட்டு வேலையில்லாப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியும்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top